முழு ஊரடங்கு: திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின

முழு ஊரடங்கையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2021-05-17 10:15 GMT
திருவாரூர்,

தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்திட முழு ஊரடங்கு வருகிற 24-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு மளிகை, காய்கறி கடைகள் திறக்கும் நேரத்தை குறைத்து காலை 10 வரை மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து நோய் தொற்று வேகத்தை குறைக்க ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

கடைகள் அடைப்பு

அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் எந்தவித தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அப்போது திருவாரூர் கடைவீதி, தேரோடும் 4 வீதிகள் உள்பட அனைத்து பகுதியிலும் ஓட்டல், மளிகை, காய்கறி உள்பட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டது. அரசின் தீவிர கட்டுப்பாடுகளால் மக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடியது. இதனையும் மீறி சிலர் வாகனங்களில் வெளியில் சுற்றியவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

கட்டுமான பணிகள் நிறுத்தம்

இதேபோல் மாவட்ட எல்லையான காணூர் சோதனை சாவடியில் வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உரிய விசாரணைக்கு பின்பு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ.பதிவு அவசியம் என்பதால் போலீசார் விதிமுறைகளை முறையாக கடைபிடித்தனர். ஏற்கனவே கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் நேற்று முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம்

முழு ஊரடங்கையொட்டி நீடாமங்கலம் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் நீடாமங்கலம் தேசிய நெடுஞ்சாலை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அப்போது அத்தியாவசிய பணிக்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ மனைகள், மருந்துகடைகள், பால்கடைகள் இயங்கின.

இதேபோல் கோவில்வெண்ணி, ஆலங்குடி பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் நடமாட்டமின்றியும், போக்குவரத்து இன்றி்யும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நீடாமங்கலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். முழு ஊரடங்கிலும் அரசின்

கொரோனா நிவாரண உதவித்தொகையை பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்டவரிசையில் நின்று அங்காடிகளில் வாங்கிச்சென்றனர்.

மன்னார்குடி

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி மன்னார்குடி கடைதெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள், வாகனம் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஆனால் அத்தியாவசியமான மருந்து உள்ளிட்ட பொருட்களை ஒரு சிலர் வந்து வாங்கிச்சென்றனர்.

வலங்கைமான்

வலங்கைமானில் அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இதனால் கடைத்தெரு, மகாமாரியம்மன் கோவில், கோவிந்தகுடி, ஆவூர், அரித்துவாரமங்கலம், ஆலங்குடி, விருப்பாச்சிபுரம், அமராவதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றியும், வாகன போக்குவரத்து இன்றியும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அப்போது வலங்கைமான், ஆவூர், அரித்துவாரமங்கலம், ஆலங்குடி, கும்பகோணம், பாபநாசம், நீடாமங்கலம் உள்ளிட்ட சாலைகளில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. ேமலும் தேவையின்றி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வெளியில் சுற்றும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இ்தையடுத்து ஆங்காங்கே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பரவுவதை தடுக்க அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நன்னிலம்

முழு ஊரடங்கின் போது நன்னிலம் அருகே தேவையின்றி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களுக்கு நன்னிலம் போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

மேலும் செய்திகள்