காஞ்சீபுரம் குடியிருப்பு பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
காஞ்சீபுரம் குடியிருப்பு பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் தனியார் ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் அளிக்க வேண்டுமென தமிழக அரசு கூறியது.
இதையடுத்து ஆஸ்பத்திரியின் பின்புறம் உள்ள தெரு பகுதி வழியாக கொரோனா சிகிச்சை மையம் அமைக்க சுகாதாரத்துறை அனுமதி அளித்ததாக கூறி அதற்கான கட்டமைப்பு வசதிகளை தனியார் ஆஸ்பத்திரி மேற்கொண்டது.
அந்த பகுதியை சுற்றி குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் இங்கு கெரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டால் கொரோனா தொற்று எளிதில் பரவும் எனவும் அதிக அளவில் சிறுவர்கள், ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் இதற்கு அரசு அனுமதிக்க கூடாது என அந்த பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் ஆஸ்பத்திரிக்கு சொந்தமான பகுதி சிறிய பகுதி என்பதால் ஆபத்து காலங்களில் நோயாளிகள் வெளியேறுவது சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.