ஈரோடு மாவட்டத்தை மிரள வைக்கும் தொற்று பரவல்: புதிய உச்சமாக ஒரே நாளில் 1,232 பேருக்கு கொரோனா- பெண் உள்பட 2 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 1,232 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.;

Update: 2021-05-16 22:38 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 1,232 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
புதிய உச்சம்
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சமடைய செய்து உள்ளது. கடந்த சில வாரங்களாக புதிதாக நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் 3 நாட்கள் 900-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து இருப்பது மக்களை மிரள வைத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 1,232 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதுவே மாவட்டத்தின் புதிய உச்சமாகும்.
6 ஆயிரம் பேர்
ஈரோடு மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 100 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 26 ஆயிரத்து 822 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 642 பேர் குணமடைந்து உள்ளார்கள்.
புதிய பாதிப்பு அதிகரித்து வருவதால் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை    இல்லாத  வகையில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 ஆயிரத்து 88 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். மேலும், புதிதாக பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் ஸ்கிரீனிங் மையத்துக்கு அனுப்பி வைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய கொரோனா பரிசோதனை செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
2 பேர் பலி
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ளார்கள். ஈரோட்டை சேர்ந்த 51 வயது பெண் கொரோனா பாதிப்பு காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 12-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்தது.
குழப்பம்
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கொரோனா பாதிப்பு குறையும் என்று பொதுமக்கள் நினைத்து வருகிறார்கள். ஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு வாரமாகியுள்ள நிலையில் தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் தினமும் புதிய உச்சத்தை ஏற்படுத்தும் நோய் பாதிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கொரோனாவுக்கு புதிதாக பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சைக்காக எங்கு செல்வது? யாரை தொடர்பு கொள்வது? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மேலும், அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதிகள் இல்லை என்று பரவும் தகவல் பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறை (வார் ரூம்) அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அறை இன்று (திங்கட்கிழமை) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. எனவே அதுவரை மாவட்ட கட்டுப்பாட்டு அறையான 0424-2260211 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்