சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை மையத்தை நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகை
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை மையத்தை நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை மையத்தை நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
கொரோனா நோயாளிகள்
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 900-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மையத்திற்குள் நோயாளிகளின் உறவினர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.
இதனால் டாக்டர்களும், செவிலியர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். நோயாளிகளின் உறவினர்கள் கொரோனா சிகிச்சை அளிக்கும் மையத்திற்குள் வரக்கூடாது என எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து நோயாளிகளின் உறவினர்கள் வந்த வண்ணமாக இருந்தனர்.
முற்றுகை
இந்த நிலையில், நேற்று காலை கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் யாரும் சிகிச்சை மையத்திற்குள் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதனால் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை அளிக்கும் வார்டுக்கு முன்பாக காலை 11.30 மணியளவில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் கொரோனா நோயாளிகளின் சிகிச்சை மையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து நோயாளிகளின் உறவினர்கள் சிலர் கண்ணீர் மல்க கூறியதாவது:-
மருத்துவர்களும், செவிலியர்களும் கொரோனா சிகிச்சை மையத்திற்குள் சரியாக வருவதில்லை. மருந்துகளை வாங்கி வர கூறுகிறார்கள். நோயாளிகள் மருந்துகளை எப்படி வாங்கி வர முடியும். அதனால் தான் நாங்கள் உடன் இருக்கிறோம்.
டாக்டர்கள், செவிலியர்கள் மீது புகார்
கஷ்டப்பட்டு போராடி படுக்கை வசதி பெற்ற நாங்கள் நோயாளிகளுடன் உடனிருந்து அவர்களை கவனித்து வந்தோம். ஆனால் திடீரென யாரும் உள்ளே இருக்கக்கூடாது. வெளியே செல்லுங்கள் என தெரிவித்து எங்களை விரட்டி விட்டுள்ளனர். நோயாளிகளை மருத்துவர்களும், செவிலியர்களும் பார்த்துக்கொண்டால் நாங்கள் ஏன் சிகிச்சை மையத்திற்குள் செல்கிறோம். டாக்டர்களும், செவிலியர்களும் நன்றாக பார்த்துக் கொண்டால் நாங்கள் இப்போதே வீடுகளுக்குச் சென்று விடுகிறோம்.
இனியாவது கொரோனா நோயாளிகளை சரியான முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும். நேரத்திற்கு மருந்து, மாத்திரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.
சுமார் அரை மணி நேரம் நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகையிட்டு நின்று கொண்டிருந்தனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் சிலர் அங்கு வந்து நோயாளிகளின் உறவினர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து வெளியேற்றினர்.
இந்த முற்றுகையால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.