சேலம் சீலநாயக்கன்பட்டி சுடுகாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய காத்து கிடக்கும் பரிதாபம்
சேலம் சீலநாயக்கன்பட்டி சுடுகாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய உறவினர்கள் காத்து கிடக்கும் பரிதாபம் உள்ளது.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி சுடுகாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய உறவினர்கள் காத்து கிடக்கும் பரிதாபம் உள்ளது.
கொரோனா பாதிப்பு
கொரோனா எனும் உயிர்க்கொல்லி அரக்கனிடம் நாட்டு மக்கள் சிக்கி பரிதவித்து வருகிறார்கள். கொரோனாவின் கோர தாண்டவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால் அங்குள்ள மயானங்களில், இறந்த கொரோனா நோயாளிகளின் உடல்கள் இடைவிடாமல் எரியூட்டப்பட்டு வருவதை காணமுடிகிறது.
காத்து கிடக்கும் பரிதாபம்
தற்போது சேலத்திலும் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுடுகாட்டில், இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்ய முடியாமல் அவர்களது உறவினர்கள் பல மணிநேரம் காத்து கிடக்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி அருகே காக்காயன் சுடுகாடு மற்றும் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி சுடுகாடு, செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள சுடுகாடு ஆகியவற்றில் இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கோரிக்கை
இதில், சேலம் காக்காயன் சுடுகாட்டில் உடல் நலம் பாதித்து இறந்தவர்கள் மற்றும் முதியவர்களின் உடல்கள் மட்டும் தகனம் செய்யப்படுகிறது. இங்கு தினமும் 10 முதல் 15 உடல்கள் எடுத்து வரப்பட்டு தகனம் செய்யப்படுகிறது.
இங்கு குறைவான பணியாளர்களே உள்ளதால் உடல்கள் தகனம் செய்யும் பணியில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் கூடுதலாக காக்காயன் சுடுகாட்டில் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீலநாயக்கன்பட்டி
சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள மாநகராட்சி சுடுகாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகிறது.
இங்கு தினமும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் 10 முதல் 15 உடல்கள் தகனம் செய்யப்படுகிறது. இங்கு உடல்கள் தகனம் செய்ய 2 தகன மேடைகள் உள்ளன. இவற்றில் ஒரு தகன மேடை பழுதாகிவிட்டது. மீதமிருக்கும் ஒரு தகன மேடையில் மட்டும் உடல் தகனம் செய்யப்படுகிறது. இதனால் பல உடல்கள் நீண்ட நேரம் காத்து இருந்து பின்னர் தகனம் செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
நீண்ட வரிசை
கடந்த சில நாட்களாக அங்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட உடல்களுடன் சுடுகாடு முன்பு ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் நிற்பதை காண முடிந்தது. சீலநாயக்கன்பட்டி சுடுகாட்டில் எப்போதும் ஆம்புலன்ஸ்கள் வருவதும், போவதுமாக உள்ளது.
எனவே, சீலநாயக்கன்பட்டி சுடுகாட்டில் பழுதாகி உள்ள ஒரு தகன மேடையை உடனே சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும், இதற்கான முயற்சியில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகளும் உடனே எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
தொற்று பாதிப்பு ஏற்படும் நிலை
அதேசமயம், சீலநாயக்கன்பட்டி சுடுகாட்டில் சடங்குகள் முடிந்தபின்னர் தலையணை மற்றும் இதர பொருட்களை வீசி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சீலநாயக்கன்பட்டி சுடுகாட்டில் கொரோனா நோயாளிகளின் உடலை எரியூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீலநாயக்கன்பட்டி சுடுகாட்டில் தலையணை மற்றும் கழிவு பொருட்களை எரிக்கவும், குப்பை சேராமல் இருக்கவும் மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.