கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் படுகாயம்
வேப்பந்தட்டை அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை கிராமத்தில் திருச்சியை சேர்ந்த அப்துல்லா என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் ஆட்களை வைத்து தொடர்ந்து கல் உடைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. நேற்று கல்குவாரியில் கல் உடைப்பதற்காக வைக்கப்பட்ட வெடி திடீரென்று வெடித்துள்ளது. இதில் நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த ராமர் (வயது 50), பெரியசாமி (55) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் பெரியசாமி மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்ராஜ், கல்குவாரியை பார்வையிட்டு, அந்த குவாரிக்கு அரசு உரிமம் முறையாக பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், வெடி விபத்து குறித்தும் விசாரணை நடத்தினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.