முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து போலீசார் அறிவுரை வழங்கினர்

ரோஜா பூ கொடுத்து அறிவுரை வழங்கிய போலீசார்

Update: 2021-05-16 19:48 GMT
மதுரை
முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து போலீசார் அறிவுரை வழங்கினர். மேலும் பல்வேறு இடங்களில் தடுப்பு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தடுப்பு அமைத்து கண்காணிப்பு
கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமாக இருக்கிறது. அதனை கட்டுபடுத்த அரசு ஊரடங்கு பிறப்பித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை நகரில் சுமார் 20 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி தேவையின்றி வருபவரை போலீசார் அபராதம் விதித்தும், எச்சரிக்கை செய்தும் அனுப்பி வைத்தனர். இது தவிர கீழமாசிவீதி, மாட்டுத்தாவணி, புதூர், கருப்பாயூரணி ரிங் ரோடு, பை பாஸ் ரோடு என முக்கிய பகுதிகள் மற்றும் வைகை ஆற்றின் தரைபாலங்கள், முக்கிய பாலங்கள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வாகன போக்குவரத்தை போலீசார் முற்றிலும் குறைத்தனர். இதனால் நகரில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ரோஜா பூ கொடுத்த போலீசார்
கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே நேற்று முழு ஊரடங்கை மீறி தேவையின்றி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்களை போக்குவரத்து போலீசார் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வெளியே சுற்ற வேண்டாம் என்றும், கொரோனா பாதிப்பு குறித்து எடுத்துக்கூறி வீட்டிற்கு செல்லுமாறு அறிவுரை வழங்கினார்கள்.
போலீசார் நூதனமுறையில் பொதுமக்களிடம் இவ்வாறு நடந்து கொண்டது பெரும் வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஒரு சில இடங்களில் போலீசாரின் அறிவுரைகளையும் மீறி ஒரு சிலர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களையும் ரோந்து வந்த போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்