கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்
அலங்காநல்லூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராம ஊராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு பரவி வருகிறது. இதில் குமாரம், கோட்டை மேடு, மணியஞ்சி மற்றும் அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் ராமன், ராஜசேகர் உள்ளிட்ட 75 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் தினமும் 2 குழுக்களாக சென்று பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதில் கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் மதுரை அரசு, தனியார் மருத்துவமனைகளிலும், சத்திரப்பட்டி கிரசன்ட் மருத்துமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கோட்டைமேடு ஊராட்சி குமாரம் கிராமத்தில் மட்டும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால் கிராம குடியிருப்பு பகுதிகளில் ஊராட்சி தலைவர் சர்மிளா மோகன் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் வைத்து முன்னெச்சரிக்கையாக அடைக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட பகுதிகளில் வருவாய், காவல், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர்.