கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தொழிலாளி அடித்து கொலை
சிக்கமகளூரு அருகே கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார். வைரஸ் பரவி விடும் என்ற அச்சத்தில் வெறிச்செயலில் ஈடுபட்ட தம்பியை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு அருகே கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார். வைரஸ் பரவி விடும் என்ற அச்சத்தில் வெறிச்செயலில் ஈடுபட்ட தம்பியை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளிக்கு கொரோனா
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கலசா அருகே மரசனிகே கிராமத்தை சேர்ந்தவர் மகாவீர்(வயது 43). இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மகாவீருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கலசா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதனால் அவர் அதே மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதன் பயனாக மகாவீர் கொரோனாவில் இருந்து மீண்டார்.
அடித்து கொலை
இதையடுத்து நேற்று மாலை மகாவீர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனால் மகாவீர் நேராக வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த மகாவீரின் தம்பி பஸ்வநாத் என்பவர், மகாவீரை வீட்டிற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார்.
மேலும் கொரோனா பாதித்த உன்னால் வீட்டில் உள்ளவர்களுக்கும் வைரஸ் பரவி விடும் என்றும், இதனால் வீட்டிற்குள் வர கூடாது என்றும் மகாவீரிடம், பஸ்வநாத் கூறி உள்ளார்.
இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த பஸ்வநாத், மகாவீரை இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மகாவீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ்வநாத் அங்கிருந்து தப்பி சென்றார்.
கைது-பரபரப்பு
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கலசா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகாவீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தாலும், மகாவீரால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று பரவி விடும் என்ற பயத்தில் அவரை, பஸ்வநாத் கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கலசா போலீசார் தலைமறைவாக இருந்த பஸ்வநாத்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
கொரோனா பரவி விடும் என்ற அச்சத்தில் அண்ணனே, தம்பியே கொலை செய்த சம்பவம் சிக்கமகளூரு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.