வைரஸ் பரவி விடும் என்ற பீதியில் கொரோனா நோயாளி கல்லால் விரட்டி அடிப்பு
மைசூரு அருகே, வைரஸ் பரவி விடும் என்ற பீதியில் கொரோனா நோயாளியை கல்லால் விரட்டி அடித்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்து உள்ளது.
மைசூரு:
மைசூரு அருகே, வைரஸ் பரவி விடும் என்ற பீதியில் கொரோனா நோயாளியை கல்லால் விரட்டி அடித்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்து உள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கொரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்படுவோருக்கு ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடைக்காத அவல நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனாவுக்கு இறப்பவர்களின் உடல்களையும் சரியாக கையாளுவது இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது உள்ளது.
இந்த நிலையில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட நபரை கல்லால் விரட்டி அடித்த சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா நாகரஒலே வனப்பகுதிக்கு உட்பட்ட காராபுரா கிராமத்தை சேர்ந்த 50 வயது நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சளி, காய்ச்சல் தொல்லையால் அவதிப்பட்டு வந்த அந்த நபர், கொரோனா பரிசோதனை செய்து இருந்தார். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.
ஆம்புலன்சுக்காக காத்து....
இந்த நிலையில் சுகாதாரத்துறையினர் அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது உங்கள் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைப்பதாகவும், அந்த ஆம்புலன்சில் ஏறி ஆஸ்பத்திரிக்கு வரும்படியும் கூறி இருந்தனர்.
இதனால் கொரோனா நோயாளியும் ஆஸ்பத்திரிக்கு செல்ல தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு ஆம்புலன்சுக்காக காத்து இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த அதேகிராமத்தை சேர்ந்த தாசேகவுடா, பலராம் ஆகியோர் கொரோனா நோயாளியிடம் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டு உள்ளனர். அப்போது தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதால், ஆஸ்பத்திரிக்கு செல்வதாகவும், ஆம்புலன்சுக்காக காத்து இருக்கிறேன் என்றும் கூறியதாக தெரிகிறது.
கல்லால் விரட்டி அடிப்பு
இதனால் திடீரென ஆத்திரம் அடைந்த தாசேகவுடா, பலராம் உன்னால் கிராமத்தில் வைரஸ் பரவி விடும் என்று கூறியதோடு, இனி நீ கிராமத்திற்குள் வர கூடாது என்று கூறி கொரோனா நோயாளியை கல்லால் விரட்டி அடித்ததாக தெரிகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த நோயாளி, சற்று தூரம் தள்ளி நின்று ஆம்புலன்சுக்காக காத்து நின்றார். பின்னர் வந்த ஆம்புலன்சில் ஏறி அவர் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் தன்னை கல்லால் தாக்கி விரட்டியது குறித்து டாக்டர்களிடம், கொரோனா நோயாளி கூறி இருந்தார். இதனை கேட்டு அதிர்சசி அடைந்த டாக்டர்கள் பீச்சனஹள்ளி போலீஸ் நிலையத்தில் தாசேகவுடா, பலராம் மீது புகார் அளித்தனர்.
அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள தாசேகவுடா, பலராமை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் மைசூரு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.