வருவாய்த்துறை பெண் அதிகாரி கொரோனாவுக்கு பலி
பேரூர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி கொரோனாவுக்கு பலியானார்.
பேரூர்
பேரூர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி கொரோனாவுக்கு பலியானார்.
இது குறித்து கூறப்படுவதாவது:-
வருவாய்த்துறை அதிகாரி
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் செம்மலர் செல்வி (வயது 41). இவர் பேரூர் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இவர், இதற்கு முன்பு, பேரூரில் கிராம நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். செம்மலர்செல்வி, கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போதும் தேர்தல் உதவியாளராக பணியாற்றி உள்ளார்.
அதன்பிறகு அவர், பேரூர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி உள்ளார்.
கொரோனாவுக்கு பலி
அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.இதையடுத்து, அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி செம்மலர்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கொரோனா தொற்று பாதித்து பெண் அதிகாரி பலியான சம்பவம் வருவாய் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.