கடலூர் மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள் - தேவையின்றி சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு

ஞாயிறு முழு ஊரடங்கால் கடலூர் மாவட்ட சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன. தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-05-16 18:09 GMT
கடலூர், 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.இதைத் தடுப்பதற்காக கடந்த மாதம் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி மதியம் 12 மணி வரை செயல்பட்ட கடைகள் நேற்று முன்தினம் காலை 10 மணியுடன் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் இந்த முழு ஊரடங்கால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. கடலூரில் காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள், மீன் மற்றும் இறைச்சி கடைகள் உள்பட பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டன. குறிப்பாக மஞ்சக்குப்பம் மீன் மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள மீன் மார்க்கெட், முதுநகர் மீன் மார்க்கெட் ஆகியவை மூடப்பட்டு இருந்தன.

இதனால் கடலூர் நேதாஜி சாலை, பாரதி சாலை, லாரன்ஸ் ரோடு, இம்பீரியல் சாலை, செம்மண்டலம் ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பஸ் நிலையத்திலும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. முன்னதாக கடலூர் மஞ்சக்குப்பத்தில் சாலையோரம் கடை வைத்திருந்த பெண்களை ஊர்க்காவல் படையினர் எச்சரிக்கை எச்சரிக்கை செய்து அனுப்பினர். ஒரு சிலர் அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளில் சென்றதையும் பார்க்க முடிந்தது.

மேலும் ஓட்டல்கள் திறக்கப்பட்டு இருந்தன. அதில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் குறைந்த எண்ணிக்கையிலான ஓட்டல்கள் மட்டும் திறக்கப்பட்டு இருந்ததை பார்க்க முடிந்தது.
அதேவேளை பால், மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டும் தடையின்றி நடந்தன. ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் வலம் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, கம்மாபுரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்