காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
பென்னாகரம்,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழக- கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
இதையடுத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது.
நீர்வரத்தை காவிரியின் நுழைவிடமான தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.