நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் சாவு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை பலியான நபர்களின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்து உள்ளது.

Update: 2021-05-16 18:03 GMT
நாமக்கல்:
பலி எண்ணிக்கை அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வந்தது. இந்தநிலையில் நேற்று, கடந்த சில தினங்களை காட்டிலும் சற்று குறைந்து 370 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தொடர்ந்து கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 157 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்த 58 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
6 பேர் சாவு
இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எர்ணாபுரம் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 66 வயது முதியவர் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாமக்கல்லை சேர்ந்த 60 வயது முதியவர், ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி, நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த 75 வயது முதியவரும் இறந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் செய்திகள்