வீடு இடிந்து உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்

குமரி மாவட்டத்தில் வீடு இடிந்து உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2021-05-16 17:51 GMT
கொல்லங்கோடு:
குமரி மாவட்டத்தில் வீடு இடிந்து உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
குழந்தை உள்பட 2 பேர் பலி
அருமனை அருகே காரோடு பகுதியில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் டைலஸ் மகன் யூஜின் (வயது 36) என்ற சட்டக்கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதே போல் நேற்றுமுன்தினம் தேங்காப்பட்டணம் அருகே ராமன்துறை மீனவ கிராமத்தில் வீசிய சூறாவளி காற்றில் டயானா பெக்மீர் என்பவரது வீட்டின் மேற்கூரை நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்த டயானா பெக்மீர், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் மீது கற்கள் விழுந்தது. இதில் டயானா பெக்மீரின் 2 வயது மகள் ரெஜினா பரிதாபமாக உயிரிழந்தாள். 
தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி
வீடு இடிந்து இறந்த இருவரின் குடும்பத்தினருக்கும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று குமரிக்கு வந்தார். 
அவர் ராமன்துறையில் உள்ள டயானா பெக்மீர் வீட்டுக்கு சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர் கலெக்டர் அரவிந்த் தலைமையில்  பேரிடர் நிவாரண நிதி ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இதே போல் காரோடு பகுதிக்கு சென்று யூஜின் குடும்பத்தினருக்கும் ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.
அப்போது கலெக்டர் அரவிந்த், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகரன், விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்சிறை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மோகன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை தலைவர் அப்துல் ரகுமான், பைங்குளம் பேரூர் செயலாளர் அம்சி நடராஜன், காங்கிரஸ் கட்சியின் குமரி மேற்கு மாவட்ட தலைவர் தாரகை கத்பர்ட், மாநில பொதுச்செயலாளர் ஜார்ஜ் ராபின்சன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
ஆலோசனை
முன்னதாக நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் மகேஷ், பொறியாளர் அணி செயலாளர் பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் விருந்தினர் மாளிகையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், வருவாய் அதிகாரி ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் மழை சேதம் மற்றும் சூறைக்காற்று பாதிப்பு பற்றியும், முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார். 

மேலும் செய்திகள்