மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு இதுவரை ரூ.427 கோடி சுழல்நிதி-அமைச்சர் தகவல்

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு இதுவரை ரூ.427 கோடி சுழல்நிதி வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கூறினார்.

Update: 2021-05-16 16:53 GMT
சிவகங்கை,
-
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு இதுவரை ரூ.427 கோடி சுழல்நிதி வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

தமிழக ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சுயஉதவிக்குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கினார்.
 தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜோதி நிர்மலாசாமி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேசியதாவது:-

ரூ.427 கோடி சுழல் நிதி

கிராமப்பகுதிகளில் பெண்கள் குழுக்கள் அமைத்து அதன் மூலம் சுயதொழில் தொடங்கி பொருளாதாரம் பயன்பெறும் வகையில் இருந்தது.மகளிர் குழுக்களுக்கு இதுவரை ரூ.427 கோடி சுழல்நிதி கடன் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சம் பெண்கள் மகளிர் குழுவில் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள்.
 கிராமப்பகுதிகளில் பிரதானத்தொழிலாக விவசாயம் இருந்து வருகின்றது. விவசாயப்பணிகள் முடிந்த பின்பு மற்ற காலக்கட்டங்களில் இணைத்தொழிலாக பண்ணைக்குட்டைகள் அமைத்து மீன்வளர்ப்பு, கோழி, ஆடு, கறவை மாடு போன்றவற்றை வளர்த்து வருமானம் பெறுகின்றனர்.காரைக்குடி செட்டிநாடு பலகாரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுபோன்ற உணவுப்பொருட்களை தயார் செய்து வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்
 கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி (மானாமதுரை), எஸ்.மாங்குடி (காரைக்குடி),மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் வீரபத்திரன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வானதி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்