3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை

முழு ஊரடங்கால் ராமேசுவரம், பாம்பன் பகுதி வெறிச்சோடியது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2021-05-16 16:44 GMT
ராமேசுவரம், 
முழு ஊரடங்கால் ராமேசுவரம், பாம்பன் பகுதி வெறிச்சோடியது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
முழு ஊரடங்கு
 கொரோனா பரவல் எதிரொலியாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இதையடுத்து ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை முதலே அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக தனுஷ்கோடி பஸ் நிலையம், ராமர் பாதம் கோவில் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சந்திப்பு சாலை, திட்டக்குடி சந்திப்பு சாலை பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு  வெறிச்சோடி காணப்பட்டது. 
மேலும் கோவில் ரத வீதி, பஸ் நிலைய சாலை உள்ளிட்ட நகரின் அனைத்து சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச் சோடியது. முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அனை வரும் தங்களது வீடுகளிலேயே முடங்கினர்.
மேலும் முழு ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
ரோந்து
 பாம்பன் ரோடு பாலமும் முழுமையாக வெறிச்சோடியது. பாம்பன் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு ஜாக்குலின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்ட போலீசார் பாம்பன் ரோடு பாலம் மற்றும் நகர் பகுதி முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தங்கச்சிமடம் பகுதியில் இன்ஸ்பெக்டர் நர்மதா, சப்- இன்ஸ்பெக்டர் லட்சுமணன் உள்ளிட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். முழு ஊரடங்கு காரணமாக ராமேசுவரம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி, தேவிப்பட்டினம், சோழிய குடி, மண்டபம் உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மேலும் செய்திகள்