மதுபாட்டில்கள்-சாராயம் பதுக்கிய 2 பேர் கைது
மதுபாட்டில்கள்-சாராயம் பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.32,780 பறிமுதல் செய்யப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே மதுபாட்டில்கள்-சாராயம் பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.32,780 பறிமுதல் செய்யப்பட்டது.
கண்காணிப்பு பணி
நாகை மாவட்டம் வேதாரண்யம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன் அறிவுரையின்படி வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரியா, சப்- இன்ஸ்பெக்டர் பத்மசேகர் மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை பகுதியில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்போடை கடைவீதியில் ஒரு கொட்டகையில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த கொட்டகையில சோதனை செய்தனர். இதில் அந்த கொட்டகையில் 175 மதுபாட்டில், 50 லிட்டர் சாராயம் மற்றும் மதுபாட்டில் விற்பனை செய்த ரூ.32,780 ஆகியவை இருந்தது தெரிய வந்தது.
2 பேர் கைது
இதை தொடர்ந்து மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த செம்போடையை சேர்ந்த அன்பரசன் (வயது42), அதே பகுதியை சேர்ந்த சேகர் (42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.