உடுமலையை அடுத்த அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் திறந்து வைத்தார்.

உடுமலையை அடுத்த அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் திறந்து வைத்தார்.

Update: 2021-05-16 15:35 GMT
தளி
உடுமலையை அடுத்த அமராவதி அணையிலிருந்து  பாசனத்திற்கு தண்ணீரை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் திறந்து வைத்தார்.
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 
இந்த சூழலில் அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள பழைய ராஜ வாய்க்கால் களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து அமராவதி முதல் ஆறு பழைய ராஜ வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. 
விவசாயிகள் மகிழ்ச்சி
இதையடுத்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று அமராவதி அணையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து அமராவதி ஆற்று ஷட்டர்கள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. அதில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.
நேற்று முதல் வருகின்ற செப்டம்பர் 28 (28.9. 2021) வரையிலான 135 நாட்களில் 80 நாட்களுக்கு திறப்பு 55 நாட்களுக்கு அடைப்பு என்ற முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள குமாரலிங்கம் (1259 ஏக்கர்) சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் (661 ஏக்கர்) சோழமாதேவி (580 ஏக்கர்) கணியூர் (390 ஏக்கர்) கடத்தூர் (1171 ஏக்கர்) காரத்தொழுவு (625 ஏக்கர்) ஆறு வாய்க்கால் மூலமாக 4 ஆயிரத்து 686 நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சாரல் மழை
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், ஆர்.டி.ஓ.கீதா, தாசில்தார் ராமலிங்கம், செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் பாபு சபரீஸ்வரன், உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
மேலும் அணைப்பகுதியில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 1100 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி அணைப்பகுதியில் 8 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. அணையில் 70.10 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது.

மேலும் செய்திகள்