மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா: நாமக்கல் ஒன்றியத்தில் 4,644 பேர் பாதிப்பு; குறைந்தபட்சமாக கொல்லிமலையில் 82 பேருக்கு தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், அதிகபட்சமாக நாமக்கல் ஒன்றியத்தில் 4,644 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. குறைந்தபட்சமாக கொல்லிமலை ஒன்றியத்தில் 82 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.;

Update: 2021-05-16 14:46 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 300 என்கிற அளவில் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி 400-க்கு மேற்பட்டவர்களும், 14-ந் தேதி 500-க்கு மேற்பட்டவர்களும், நேற்று முன்தினம் 600-க்கு மேற்பட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கத்தை விட கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று உள்ள நபர்கள் அதிகளவில் கண்டறியப்பட்டு வருகிறார்கள். மேலும் பரிசோதனை செய்வதன் மூலமே தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிப்பதன் மூலமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

4.27 லட்சம் பேருக்கு பரிசோதனை

இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த நாட்களில் தினசரி 1,500 முதல் 1,800 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்து வந்தோம். தற்போது 2 ஆயிரம் முதல் 2,300 பேர் வரை பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 4 லட்சத்து 27 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 
இதில் சுமார் 21 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில், அதிகபட்சமாக நாமக்கல் ஒன்றியத்தில் 4,644 பேருக்கும், குறைந்தபட்சமாக கொல்லிமலை ஒன்றியத்தில் 82 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒன்றியம் வாரியாக பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நபர்களின் எண்ணிக்கை வருமாறு :-

நாமக்கல்-4,644, பள்ளிபாளையம்-3,251, திருச்செங்கோடு-3,220, ராசிபுரம்-1,721, எருமப்பட்டி-1,027, புதுச்சத்திரம்-939, கபிலர்மலை-938, பரமத்தி-904, மோகனூர்-881, எலச்சிபாளையம்-813, சேந்தமங்கலம்-706, நாமகிரிப்பேட்டை-678, மல்லசமுத்திரம்-634, வெண்ணந்தூர்-509, கொல்லிமலை-82.

மேலும் செய்திகள்