தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: நாமக்கல்லில் சாலைகள் வெறிச்சோடின; பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். வாகன போக்குவரத்து இல்லாததாலும், கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததாலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
நாமக்கல்,
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இதையடுத்து தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் பஸ், ஆட்டோ, வாடகை கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் தேசிய நெடுஞ்சாலை, பஸ்நிலையங்கள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி இருந்தன. ஆங்காங்கே ஆம்புலன்ஸ் செல்லும் சத்தம் மட்டுமே ஒலித்தது.
கடைகள் அடைப்பு
நாமக்கல் நகரை பொறுத்த வரையில் பிரதான சாலை, திருச்சி சாலை, திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை என நகர் முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி இருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதியும் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. ரேஷன்கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன.
இவற்றில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் நண்பகல் 12 மணி வரை வழங்கப்பட்டது. லாரி பட்டறைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்குகள், அம்மா உணவகம், மருந்து கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. இவற்றில் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.
வீடுகளில் முடங்கினர்
முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கினர். நாமக்கல் நகர் முழுவதும் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களிடம் எங்கு செல்கிறீர்கள்? என விசாரித்து அனுப்பி வைத்தனர்.
தேவையில்லாமல் வெளியில் சுற்றி திரிந்த இளைஞர்களுக்கும், முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்செங்கோடு
திருச்செங்கோட்டில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் திருச்செங்கோடு புதிய பஸ் நிலைய ரவுன்டானா பகுதி உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்து வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் ஈரோடு, கரூர் சாலையில் போலீசார் தடுப்புகள் அமைத்து அடைத்தனர். மேலும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்த நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
முழு ஊரடங்கையொட்டி ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், குமாரபாளையம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன. போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.