நாமக்கல் மாவட்டத்தில் 2.57 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகை வினியோகம்; கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 2 லட்சத்து 57 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு இருப்பதாக கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாலமுருகன் தெரிவித்தார்.;

Update:2021-05-16 20:13 IST
நாமக்கல்,

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி முதல்-அமைச்சராக பதவி ஏற்ற முதல் நாளிலேயே இந்த மாதம் முதலே கொரோனா நிவாரணம் முதல் தவணைத்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி நேற்று முன்தினம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 931 ரேஷன் கடைகளிலும் இந்த நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது.
தினசரி 200 டோக்கன் வீதம் நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க நேற்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதும், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகளில் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.

49 சதவீதம் நிறைவு

இதுகுறித்து நாமக்கல் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாலமுருகன் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 292 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் முதல் தவணைத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 2 லட்சத்து 57 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இது மொத்த பயனாளிகளில் 49 சதவீதம் ஆகும்.
இன்னும் 2, 3 நாட்களில் நிவாரண தொகை மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்பட்டு விடும். கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் பொதுமக்கள் முககவசம் அணிந்து வந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, நிவாரணத்தொகையை பெற்று செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்