நாகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்

நாகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை கலெக்டர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார்

Update: 2021-05-16 14:22 GMT
நாகப்பட்டினம்,

நாகை பழைய பஸ் நிலையம் அருகே நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கி கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரத்தை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். நாகை மாலி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பின்னர் கலெக்டர் பிரவீன் நாயர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

டோக்கன்

நாகை மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று ேடாக்கன்கள் நியாய விலை கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டது. இந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தொடர்புடைய நியாய விலைக்கடைகளில் கொரோனா நிவாரண நிதி பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் 356 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 683 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

100 ஆக்சிஜன் சிலிண்டர்கள்

கொரோனா தாக்கம் நாகை மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகிறது. ஒரு நாளைக்கு 300-க்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். புதிய முயற்சியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று சத்து மாத்திரை உள்ளிட்ட மருந்துகள் வழங்கும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உள்ளிட்டவைகள் தினந்தோறும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி நாகை அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 100 ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டுவரப்பட உள்ளது. இதன்மூலம் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை உயர்த்துவதற்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், துணை பதிவாளர் கனகசபாபதி, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு ஏதுவாக வெள்ளை நிற கோடுகள் போடப்பட்டு இருந்தது.நேற்று காலை முதலே பொதுமக்கள் ஆர்வமாக வந்து சமூக இடைவெளியை பின்பற்றி, நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா நிவாரண நிதியை பெற்று சென்றனர்.

மேலும் செய்திகள்