வாணியம்பாடி அருகே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை தடுத்து நிறுத்தி தி.மு.க.வினர் முற்றுகை
வாணியம்பாடி அருகே கொரோனா நிவாரண நிதி வழங்க சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை, தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டதால் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி
தி.மு.க.வினர் முற்றுகை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோ.செந்தில்குமார். இவர், நேற்று நாட்டறம்பள்ளி ஒன்றியம், திம்மாம்பேட்டை ரேஷன் கடைக்கு சென்று, கூட்டுறவு சங்கத் தலைவர் அன்பழகன் தலைமையில், ராமநாயக்கன்பேட்டை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் சாம்ராஜ் மற்றும் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் முன்னிலையில் பயனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து புல்லூர் கிராமத்தில் உள்ள ரேஷன்கடைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நாகப்பன், ராமசாமி உள்ளிட்ட தி.மு.க.வினர் இது எங்களுடைய ஆட்சி, நாங்கள் தான் தொகையினை அளிப்போம். கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் எதற்காவது வந்தோமா? என கூறி, எம்.எல்.ஏ.வை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடங்கிவைத்தார்
அப்போது அவர்களிடையே பேசிய எம்.எல்.ஏ. செந்தில்குமார், இது தமிழக அரசு திட்டம், இந்த தொகுதி எம்.எல்.ஏ. என்பதால் நான் தொடக்கி வைக்க வந்துள்ளேன். வேறு தொகுதியின் எம்.எல்.ஏ.வின் பெயரை போட்டு (ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. தேவராஜ்) இங்கு பேனர் வைத்து தொடக்கி வைப்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
இந்த தொகுதியை சேர்ந்தவர்கள் தொடக்கி வைத்தால் கூட ஏற்றுக் கொள்ளலாம். அதனால் நான் தான் தொடங்கி வைப்பேன் என கூறினார். பின்னர் அவர்களை சமாதானம் செய்துவிட்டு ரூ.2 ஆயிரம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.
தொடர்ந்து வாணியம்பாடி தொகுதி, ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள தனது சொந்த ஊரான பெத்தவேமப்பம்பட்டு ரேஷன் கடையில் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார். அப்போது திடீரென ஜோலார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தேவராஜி அங்கு வந்தார். ஏற்கனவே அ.தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்குமார் திட்டத்தை தொடக்கி வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறிது நேரம் அங்கு ரோட்டிலேயே நின்று கொண்டு இருந்தார்.
செந்தில்குமார் எம்.எல்.ஏ. திட்டத்தை தொடக்கி வைத்து சென்றபின்னர், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்ற தேவராஜி எம்.எல்.ஏ. அங்கிருந்த பணியாளர்களிடம் தங்களை வைத்து திட்டத்தை தொடங்கி வைக்காமல் ஏன் அவர்களை வைத்து தொடங்கி வைத்தீர்கள் என்று மிரட்டிவிட்டு சென்றார்.
சமூக வலைதளங்களில் வெளியீடு
ஓரே நேரத்தில் கொரானா நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரேஷன் கடை ஊழியர்களை தி.மு.க. எம்..எல்.ஏ. மிரட்டி விட்டு சென்றதை சிலர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.