ஊரடங்கு கட்டுப்பாடுகளை சென்னையில் பறக்கும் ‘டிரோன்’ கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள் என்று போலீசார் முதலில் கனிவான அணுகுமுறையை கையாண்டனர். ஆனால் இதற்கு பலன் கிடைக்காததால், கண்டிப்பான அணுகுமுறையை நேற்று முன்தினம் முதல் கையில் எடுத்தனர். சென்னையில் 318 இடங்களில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் சென்னையில் நேற்று பல இடங்களில் ‘டிரோன்’ கேமரா மூலம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. சென்னை மெரினா காமராஜர் சாலையில் ‘டிரோன்’ கண்காணிப்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் டாக்டர் என்.கண்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இப்பணியை இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் ஈ.டி.சாம்சன் ஆகியோரும் கண்காணித்தனர்.கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி சாலைகளில் நடந்து சென்றவர்கள், வாகனங்களில் சுற்றியவர்கள், குடியிருப்பு பகுதிகளில் கும்பலாக அமர்ந்து அரட்டை அடித்தவர்கள் ‘டிரோன்’ கேமராவில் சிக்கினர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.சென்னையில் நேற்று ஊடரங்கு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேவையின்றி சாலையில் வலம் வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று பகல் முதல் இரவு வரையில் எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, எத்தனை வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது? குறித்த விவரங்கள் இன்று வெளியாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.