மாநகராட்சி மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை தகனம், அடக்கம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி ககன்தீப் சிங் பேடி தகவல்
மாநகராட்சி மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை தகனம், அடக்கம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கான வசதிகளை செய்து வருவதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
சென்னை,
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க 300 பயிற்சி டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த பயிற்சி டாக்டர்கள், அந்தந்த மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி ஆலோசனை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் கொரோனா நோயாளிகளை தொடர்பு கொண்டு, அவர்களின் உடல்நலம் குறித்து விசாரிப்பார்கள். நேற்று முதல் அவர்கள் தங்களுடைய பணிகளை செய்ய தொடங்கினார்கள்.
தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இந்த பயிற்சி டாக்டர்கள் மேற்கொண்ட பணிகளை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். அவருடன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோரும் இருந்தனர்.
அப்போது ஒரு நோயாளியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. செல்போனில் தொடர்பு கொண்டு அவருடைய உடல்நிலை குறித்தும், அவருடைய அடிப்படை தேவைகள் தன்னார்வலர்களை கொண்டு பூர்த்தி செய்யப்படுகிறதா? என்றும் கேட்டறிந்தார்.அதன்பிறகு சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் 140 மின்மயானங்கள் இருக்கிறது. எங்கும் உடல்களை காத்திருக்க வைக்காமல் எரியூட்டம் செய்வதற்கு மின் மயான ஊழியர்களை அறிவுறுத்தி இருக்கிறோம். சென்னையை பொறுத்தவரையில் மின் மயானங்களில் பதற்றமான நிலை இன்னும் வரவில்லை.
மாநகராட்சி மயானங்களில் உடல்களை தகனம், அடக்கம் செய்ய கொண்டு செல்லலாமா?, காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்குமா? என்பது குறித்து ஆன்லைன் மூலம் பார்ப்பதற்கான வசதிகள், உடல்களை தகனம், அடக்கம் செய்வதற்கான முன்பதிவு வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, அண்ணாநகர் மண்டலம், சேத்துப்பட்டில் உள்ள பழைய மத்திய தார் கலவை மைய வளாகத்தில் செயல்பட்டு வரும் 80 மெட்ரிக் டன் திறன் கொண்ட தோட்டக்கழிவுகள் மற்றும் தேங்காய் ஓடுகளில் இருந்து மாற்று உபயோக பொருட்கள் தயார் செய்யும் மையத்தையும், அதே வளாகத்தில் செயல்படும் 100 மெட்ரிக் டன் திறன் கொண்ட உயிரி எரிவாயு மையத்தையும் ஆய்வு செய்தார்.