அந்தியூரில், கொரோனா நிவாரண நிதி வாங்க கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி நீண்ட வாிசையில் காத்து நின்ற பொதுமக்கள்

அந்தியூரில் கொட்டும் மழையிலும் கையில் குடை பிடித்தபடி நீண்ட வரிசையில் காத்து நின்று கொரோனா நிவாரண நிதியை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

Update: 2021-05-15 22:35 GMT
அந்தியூரில் கொட்டும் மழையிலும் கையில் குடை பிடித்தபடி நீண்ட வரிசையில் காத்து நின்று கொரோனா நிவாரண நிதியை பொதுமக்கள் வாங்கி சென்றனர். 
ரூ.2 ஆயிரம்
முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது கொரோனா நிவாரண நிதியாக அரிசி ரேஷன் அட்டை வைத்து உள்ளவர்களுக்கு முதல் கட்ட தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். இதைத்ெ்தாடர்ந்து ரேஷன் கடைகள் மூலம் ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டது.
கொரோனா தொற்று காரணமாக ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வீடுகளுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் நேரில் சென்று டோக்கன் வழங்குவார்கள். அதன் அடிப்படையில் டோக்கனில் குறிப்பிட்ட தேதியில், நேரத்தில் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகையை 15-ந் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டனர். 
4 ரேஷன் கடைகள் 
இந்த நிலையில் அரசின் அறிவிப்பின் படி நேற்று ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரத்தை பெற்று வந்தனர். 
ஈரோடு மாவட்டத்திலும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று கொரோனா நிவாரண நிதியை பெற்று சென்றனர். அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் 4 ரேஷன் கடைகள் ஒரே இடத்தில் உள்ளன. 
குடை பிடித்தபடி...
இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தாங்கள் உணவுப்பொருட்கள் வாங்கும் ரேஷன் கடையில் குவிந்தனர். கூட்டம் அதிக அளவில் வந்ததால் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அப்போது தவுட்டுப்பாளையத்தில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கையில் குடை பிடித்தபடி கொரோனா நிவாரண நிதியை நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கி சென்றனர். 

மேலும் செய்திகள்