புதிய ஊரடங்கு கட்டுப்பாடு அமல்: நெல்லையில் காலை 10 மணியுடன் கடைகள் அடைப்பு
புதிய ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக நெல்லையில் காலை 10 மணியுடன் கடைகள் அடைக்கப்பட்டன.
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகிறது. ஊடங்கு நாட்களில் நண்பகல் 12 மணி வரை மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள், டீக்கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் டீக்கடைகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு, மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. மேலும் அனுமதிக்கப்பட்டிருந்த கடைகளை காலை 10 மணி வரை மட்டும் திறந்திருக்க வேண்டும் என நேரம் குறைக்கப்பட்டது.
அமலுக்கு வந்தது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி நெல்லை மாநகரில் நேற்று அனைத்து டீக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் டீ குடிக்க முடியாமல் டீ பிரியர்கள் தவித்தனர். இதேபோல் மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் நேற்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டன. இதனால் காலை முதலே கடைகளில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் 2 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகளை வாங்கிச்சென்றனர். தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறி வாங்குவதற்கு சிலர் கார்களில் வந்து செல்வதால் மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் இறைச்சி கடைகள், மீன் கடைகளிலும் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அந்த கடைகளும் காலை 10 மணியுடன் மூடப்பட்டன.
இதையொட்டி போலீசார் காலை 10 மணி வரை வாகனங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு சென்றுவர அனுமதி அளித்தனர். ஆனால் அதன்பிறகு சாலைகளில் இரும்பு தடுப்புகளை வைத்து வாகன போக்குவரத்துக்கு தடை விதித்தனர். ஆம்புலன்ஸ் மற்றும் அவசர தேவைகளுக்காக வந்தவர்களை மட்டுமே செல்ல அனுமதி அளித்தனர்.
இதை மீறி அத்தியாவசிய தேவையின்றி வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதிக நேரம் சுற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விதிகளை மீறிய கடைகளுக்கும் மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்தனர். இதனால் நெல்லை மாநகரம் நேற்று காலை 10 மணிக்கு பிறகு வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா சங்கிலி தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்த ஊரடங்கு தொடர்ந்து கடுமையாக அமல்படுத்தப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.