ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு
நெல்லை, தென்காசியில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
நெல்லை:
நெல்லை ஆவின் பொது மேலாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டு உள்ளது. ஆவின் நெல்லை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உள்ளடங்கிய நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ரூ.3 குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. நெல்லை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (ஆவின்) மூலமாக ஒரு நாளைக்கு 43 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் உள்ளூர் விற்பனையாக 33 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் பால் உப பொருட்கள் தயார் செய்யப்பட்டு நுகர்வோர் பயன்பெறும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து ஆவின் பால் பாக்கெட் வகைகளுக்கும் தற்போதைய விலையில் இருந்து ஒரு லிட்டருக்கு ரூ.3 வீதம் குறைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிற பாக்கெட்) ரூ.43-ல் இருந்து ரூ.40 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) ஒரு லிட்டர் ரூ.49-ல் இருந்து ரூ.46 ஆகவும், நிலை கொழுப்பு பால் (ஆரஞ்சு நிறம்) ரூ.54-ல் இருந்து ரூ.51 ஆகவும் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்வதுடன் தொடர்ந்து தமிழக அரசின் ஆவின் நிறுவனத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.