ஈரோடு மாவட்டத்தில் தேவையான அளவு ஆக்சிஜன் வினியோகம் உள்ளது

ஈரோடு மாவட்டத்தில் தேவையான அளவு ஆக்சிஜன் வினியோகம் உள்ளதாக இந்திய மருத்துவ சங்க ஈரோடு கிளை பொருளாளர் டாக்டர் சுதாகர் கூறினார்.

Update: 2021-05-15 20:12 GMT
ஈரோடு மாவட்டத்தில் தேவையான அளவு ஆக்சிஜன் வினியோகம் உள்ளதாக இந்திய மருத்துவ சங்க ஈரோடு கிளை பொருளாளர் டாக்டர் சுதாகர் கூறினார்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அவர்களுக்கு சுவாசம் செலுத்த போதிய ஆக்சிஜன் இல்லாத நிலை உருவானது.
இது மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி மருத்துவமனை நிர்வாகங்கள், டாக்டர்களையும் தாண்டி பொதுமக்களையும் மிகவும் அச்சத்துக்கு உள்ளாக்கியது. இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஓரளவு குறைந்து போதிய அளவு வினியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் வந்து உள்ளன.
நடவடிக்கை
இதுபற்றி இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை பொருளாளரும், சுதா பல்துறை ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் கே.சுதாகர் கூறியதாவது:-
ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஆக்சிஜனை கையாள்வதில் சரியான நிர்வாகத்திறன் இல்லாததால் முழுமையான வினியோகம் இல்லாத நிலை இருந்தது. இந்தநிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் சரியான நேரத்தில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்தார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கான காரணங்கள், தேவை மற்றும் பயன்பாடு குறித்து திட்டமிடுதல் செய்ததுடன், பெருந்துறையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
தனியார் ஆஸ்பத்திரிகள்
இதன் மூலம் தேவையின் அடிப்படையில் அரசு ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களாக திகழும் 20 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே தினசரி பாதிப்பு இல்லாமல் ஆக்சிஜன் கிடைத்து வருகிறது.
அதே நேரம் கொரோனாவை கட்டுப்படுத்துவது பொதுமக்கள் கையில் உள்ளது. தனிமனித இடைவெளி, முக கவசம் அணிவது, ஊரடங்கு நாட்களில் வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பது. காய்ச்சல், சளி பிரச்சினைகள் இருப்பவர்கள் மற்றவர்களை விட்டு தனித்து இருப்பதுடன், உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சை தொடங்குவது என்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படாமலும், அக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமலும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இவ்வாறு டாக்டர் கே.சுதாகர் கூறினார்.
----------


மேலும் செய்திகள்