மணப்பாறை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி காகித தொழிற்சாலை வாயில் முன் தொழிலாளர்கள் போராட்டம்
மணப்பாறை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி காகித தொழிற்சாலை வாயில் முன் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை,
மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு காகித தொழிற்சாலையின் இரண்டாம் அலகு உள்ளது. இதில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் சுமார் 120-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் நிரந்தர பணியாளர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளானதாக கூறப்படுகின்றது. இதனால் வேதனைக்கு ஆளான தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கத்தினர் சில கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகத்திடம் மனு அளித்ததாக கூறப்படுகின்றது. இருப்பினும் எந்தவித தீர்வும் எட்டப்பவில்லை.
இதையடுத்து சில தொழிற்சங்கங்களை சேர்ந்த நிரந்தர பணியாளர்கள் சுமார் 120-க்கும் மேற்பட்டோர் ஆலை வாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு காலத்தில் முழு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும். ஆலையை மூட வேண்டும். இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் போராட்டம் குறித்து ஆலை நிர்வாகத்தின் சார்பில் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்பதாகவும் கூறியதாக தெரிகிறது.