தினமும் அதிகரித்து வரும் கொரோனா எதிரொலி: திருச்சி காந்தி மார்க்கெட் மூடல்

தினமும் அதிகரித்து வரும் கொரோனா எதிரொலியாக திருச்சி காந்தி மார்க்கெட் நேற்று முதல் மூடப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் மேலரண் சாலைக்கு மாற்றப்படுகிறது.

Update: 2021-05-15 19:39 GMT

திருச்சி,
தினமும் அதிகரித்து வரும் கொரோனா எதிரொலியாக திருச்சி காந்தி மார்க்கெட் நேற்று முதல் மூடப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் மேலரண் சாலைக்கு மாற்றப்படுகிறது.

காந்தி மார்க்கெட்

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் காந்தி மார்க்கெட் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சி பொன்மலை ரெயில்வேக்கு சொந்தமான ஜி-கார்னர் திடலுக்கு காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரம் மாற்றப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று குறைந்த பின், மீண்டும் காந்தி மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டு வியாபாரம் நடந்து வந்தது.

திருச்சி மாவட்டத்தில் சமீபகாலமாக கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் வருகிற 24-ந் தேதி வரை மேலும் சில கட்டுப்பாடுகளுடன் முழு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதாவது காலை 10 மணிக்குள் காய்கறி, மளிகை, இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகள் மூடப்பட வேண்டும்.

செல்ல மறுத்த வியாபாரிகள்

காந்தி மார்க்கெட்டில் தினமும் கூட்டம் அதிகமாக கூடுவதால் இதை தவிர்க்க மார்க்கெட்டை பொன்மலை ஜி-கார்னர் திடலுக்கு மாற்ற கடந்த மார்ச் மாதமே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. 

இதற்காக ஜி-கார்னரில் மார்க்கெட் செயல்படுவதற்கான மின் விளக்கு வசதி, கடைகள் வரையறை உள்ளிட்ட பல் வேறு ஏற்பாடுகள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டது.  ஆனால் அங்கு சென்றால் வியாபாரம் பாதிக்கப்படும், காய்கறிகளை வைக்க பாதுகாப்பு இல்லை என்றும், எனவே, அங்கு செல்ல முடியாது என வியாபாரிகள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.

இழுத்து மூடப்பட்டது

கொரோனா பரவுதலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக காந்தி மார்க்கெட்டை தற்காலிக இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. இதுதொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் காந்தி மார்க்கெட் வியாபாரிகளிடமும் கருத்துக்களை கேட்டனர். 

அப்போது கே.என்.நேரு, காந்தி மார்க்கெட்டை மேலரண் சாலையில் (மேலபுலிவார்டு சாலை) மாற்றுவதற்கு முயற்சித்து வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று காலை 10 மணியுடன் காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரம் முடிந்ததும் காந்தி மார்க்கெட்டின் பிரதான நுழைவு வாயில் உள்ளிட்ட 6 கதவுகளும் மாநகராட்சி ஊழியர்களால் இழுத்து மூடப்பட்டன.
இன்று இரவு முதல் மாற்றம்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் காந்தி மார்க்கெட், மேலரண் சாலைக்கு மாற்றப்படுகிறது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதற்கு பதிலாக, காய்கறி வியாபாரம் மேலப்புலிவார்டு ரோடு காமராஜர் வளைவு முதல் வெல்லமண்டி சாலை (மரக்கடை) சந்திப்பு வரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக செயல்படுகிறது.

எந்த நேரத்தில் விற்பனை

மேலரண் சாலையின் கீழ்புறம் இரவு மொத்த வணிகமும், மேல்புறம் பகலில் சில்லறை வணிகமும் நடக்கிறது. அதாவது, நாளை (திங்கட்கிழமை) முதல் காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை சில்லறை வியாபாரம் நடைபெறும். இதுபோல இங்கிலீஸ் காய்கறி விற்பனை பாலக்கரை பஜார் முதல் சிவாஜி சிலை ரவுண்டானா வரை நடைபெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்