அரசு ஆஸ்பத்திரி ஊழியர் கைது

சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்து விற்ற அரசு ஆஸ்பத்திரி ஊழியர் கைது

Update: 2021-05-15 19:09 GMT
பெங்களூரு:

பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை சட்டவிரோதமாக விற்கும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஜெயநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அருகே அதிக விலைக்கு ரெம்டெசிவிர் மருந்தை ஒருவர் விற்பனை செய்ய முயற்சிப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்ற போது, சந்தேகப்படும் படியாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சோதனை நடத்திய போது ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவரது பெயர் மாருதி (வயது 29) என்பதும், ஜெயநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. ஆஸ்பத்திரியில் வேலை செய்ததால், மாருதிக்கு குறைந்த விலையில் ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் கிடைத்துள்ளது. 

அவற்றை கொரோனா நோயாளிகளின் உறவினர்களுக்கு அதிக விலைக்கு விற்று அவர் பணம் சம்பாதித்தது தெரியவந்தது. கைதான மாருதியிடம் இருந்து 6 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது திலக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்