காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
பெரம்பலூர் மாவட்டத்தில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.
பெரம்பலூர்:
கூட்டம் அலைமோதல்
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரித்த நிலையில் கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்கி வந்த மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள் ஆகியவை அரசு அறிவித்தபடி நேற்று முதல் காலை 10 மணிக்கே மூடப்பட்டது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கில் மேற்கண்ட எந்த கடைகளையும் திறக்க அனுமதி இல்லாததால், நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு சமூக இடைவெளியை யாரும் பின்பற்றவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அபராதம்
காலை 10 மணிக்கு பிறகும் சாலையில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து, அறிவுரை கூறி அனுப்பினர். மேலும் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். முழு ஊரடங்கில் மதியம் 12 மணி வரை இயங்கி வந்த டீக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் ஆகியவை அரசு அறிவித்தபடி நேற்று முதல் மாவட்டத்தில் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.