சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியம்: அண்ணாசாலையில், ஒரே ஆட்டோவில் 12 பேர் பயணம்

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியம்: அண்ணாசாலையில், ஒரே ஆட்டோவில் 12 பேர் பயணம் அபராதம் விதித்து பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார்.

Update: 2021-05-15 22:30 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், மருத்துவம் உள்பட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ-கால் டாக்சி சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோவில் டிரைவருடன் சேர்த்து 3 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை ஆட்டோ டிரைவர்கள் முறையாக கடைபிடிக்கிறார்களா? என்பதை போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இதனை மீறும் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதையடுத்து சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கினர். இது ஆட்டோவா? அல்லது டூரிஸ்ட் வேனா? என்று போலீசார் திகைக்கும் அளவுக்கு ஆட்டோவுக்குள் டிரைவருடன் சேர்த்து 12 பேர் இருந்தனர். ஒருவர் மேல் ஒருவர் நெருக்கியடித்து அமர்ந்திருந்தனர்.

சமூக இடைவெளி உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, இவர்கள் அமர்ந்திருந்ததை பார்க்கும்போது, கொரோனாவுக்கு சிவம்பு கம்பளம் விரிப்பது போன்று அமைந்திருந்தது. கொரோனா எனும் கொடிய கிருமிக்கு அன்றாடம் பலர் உயிரிழந்து வரும் நேரத்தில், இப்படி பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக நடந்துக் கொள்ளலாமா? என்று ஆட்டோவில் வந்தவர்களை போலீசார் கண்டித்தனர்.

பின்னர் டிரைவருக்கு அபராதம் விதித்து, ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்