காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் திண்டுக்கல்லில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.
திண்டுக்கல்:
மக்கள் படையெடுப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த 10-ந்தேதி முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மளிகை, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்கப்பட்டன. எனினும் கொரோனா பரவல் குறையவில்லை. இதனால் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி நேற்று முதல் காலை 10 மணியோடு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாமல் முழுஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது.
இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணிக்கே காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் திறக்கப்பட்டன. காலை 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்பதால் காலையிலேயே மக்கள் கடைகளுக்கு படையெடுத்தனர்.
காய்கறி மார்க்கெட்
இதனால் அத்தியாவசிய பொருட்களை மக்கள் மொத்தமாக வாங்கினர். எனவே, மளிகை கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதேபோல் 2 நாட்களுக்கு தேவையான இறைச்சி, மீன்களை வாங்கினர். இதனால் இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை களைகட்டியது.
அதேநேரம் சாலையோர காய்கறி கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் காய்கறி மார்க்கெட், சிறிய காய்கறி சந்தைகளில் மக்கள் காய்கறி வாங்குவதற்கு திரண்டனர். இதில் பெரும்பாலான மக்கள் ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர்.
இதனால் திண்டுக்கல் காந்தி மார்க்கெட் உள்பட அனைத்து காய்கறி மார்க்கெட்டுகளிலும் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பறிமுதல்
இதற்கிடையே காலை 10 மணி ஆனதும் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் கடைகளை அடைக்கும்படி அறிவுறுத்தினர். இதில் ஒருசிலர் கடைகளை உடனடியாக அடைத்தனர். ஆனால், ஒருசில இடங்களில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்குவதற்காக நின்றதால் அடைப்பதற்கு தாமதம் ஆனது.
அதுபற்றி தகவல் கிடைத்ததும் சுகாதாரத்துறையினர் விரைந்து சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து கடைகளை அடைக்க வைத்தனர். அதையும் மீறி திண்டுக்கல்லில் 10 மணிக்கு மேல் ஒருசிலர் கடைகளை அடைக்காமல் தாமதித்தனர். இதையடுத்து அந்த கடைகளில் இருந்த காய்கறிகள், பழங்களை சுகாகதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மீன் மார்க்கெட்
திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் அதிகாலையிலேயே மக்கள் மீன்களை வாங்க வந்தனர். இதனால் மீன் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால், காலை 10 மணிக்கு மாநகராட்சி அதிகாரிகள் மீன் மார்க்கெட்டுக்கு வந்து நுழைவுவாயிலை மூடினர்.
மேலும் 10 மணிக்கு மேல் மீன் வாங்க வந்தவர்களை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் பலர் மீன் வாங்க முடியாமல் திரும்பி சென்றனர்.
போலீசார் ரோந்து
இந்த நிலையில் முழுஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் 1,800 போலீசார் நேற்று களத்தில் இறக்கப்பட்டனர். முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்லாத வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்தனர்.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்பட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் முழுஊரடங்கை முழுமையாக அமல்படுத்தும்படி அறிவுறுத்தினர். எனவே, காலை 10 மணிக்கு மேல் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
பழனி, கொடைக்கானல்
பழனி உழவர்சந்தை, காந்தி மார்க்கெட் ஆகிய இடங்களில் வழக்கத்தை விட நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. உழவர்சந்தை பகுதியில் சமூக இடைவெளியுடன் மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். பின்னர் குறிப்பிட்ட அளவில் பொதுமக்கள் காய்கறி வாங்க உழவர்சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் காந்தி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள், கடைக்காரர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க போலீசார் அறிவுறுத்தினர். மேலும் அங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க மார்க்கெட் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் அதற்கு முன்பாக வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு நடந்தே சென்றனர்.
ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், கொடைக்கானலில் காலை 10 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மேலும் சாலையில் உலா வந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் ஆலோசனையின் பேரில், இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையில் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து நகர்ப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
----
(பாக்ஸ்) 51 வாகனங்கள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தும் வகையில் நேற்று போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 51 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் முககவசம் அணியாமல் சென்ற 351 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். அதேபோல் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 46 கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
---------