கொரோனா பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள்: நாமக்கல்லில் காலை 10 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன
கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, நாமக்கல்லில் காலை 10 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.
நாமக்கல்:
கூடுதல் கட்டுப்பாடுகள்
கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின்போது மளிகை, காய்கறி கடைகள், டீக்கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்து இருக்கலாம் என தளர்வு அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் சாலைகளில் பிற்பகல் வரை வாகன போக்குவரத்து அதிக அளவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து தமிழக அரசு ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அதன்படி நேற்று முதல் மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் காலை 10 மணிக்கு மூடப்பட வேண்டும் எனவும், டீக்கடைகளை திறக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நாமக்கல் நகரில் நேற்று காலை 10 மணிக்கு காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் மூடப்பட்டன. அரசு உத்தரவுக்கு இணங்க டீக்கடைகள் திறக்கப்படவில்லை.
சாலைகள் வெறிச்சோடின
அரசின் உத்தரவு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா? என நகராட்சி அதிகாரிகள் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு உத்தரவை மீறும் நபர்களுக்கு அபராதம் விதித்தனர். இதேபோல் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அரசின் புதிய உத்தரவால் நாமக்கல் நகரில் நேற்று காலை 10 மணி முதலே திருச்சி சாலை, பிரதான சாலை, திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை என அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம், பள்ளிபாளையம் என மாவட்டம் முழுவதும் நேற்று காலை 10 மணிக்கே மருந்து கடைகள், ஓட்டல்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன.