கோவையில் தம்பியை கத்தியால் குத்தி கொன்ற வியாபாரி

கோவையில் தாய், தங்கையை தாக்கியதால் ஆத்திரமடைந்த பழ வியாபாரி, தனது தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

Update: 2021-05-15 17:46 GMT
கோவை

கோவையில் தாய், தங்கையை தாக்கியதால் ஆத்திரமடைந்த பழ வியாபாரி, தனது தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பழ வியாபாரி

கோவை சாரமேடு பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் காதர் (வயது 56). இவருக்கு ஜாகிர் உசேன் (27), தவுபிக் (23) என்ற மகன்கள் மற்றும் ஒரு மகள் உண்டு. ஜாகிர் உசேன் பழ வியாபாரம் செய்து வருகிறார். தவுபிக் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது.

இதனால் தவுபிக் செலவுக்கு தனது அம்மாவிடம் அடிக்கடி பணம் கேட்டு வாங்கி வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் தவுபிக் தனது தாய் மற்றும் சகோதரியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அவர்கள் பணம் கொடுக்காததால் அவர்களை தாக்கியதாக தெரிகிறது.

கத்தியால் குத்தி கொலை

இதற்கிடையில் வீட்டுக்கு வந்த ஜாகீர் உசேன் தனது தம்பியின் நடவடிக்கையை கண்டித்து உள்ளார். ஆனால் தவுபிக் கேட்காமல் மீண்டும் தாய், தங்கை மற்றும் ஜாகிர் உசேனிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த ஜாகிர் உசேன் வீட்டு சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து தனது தம்பி தவுபிக்கை சரமாரியாக குத்தினார்.

இதில் அவருக்கு வயிறு, மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

 இதுதொடர்பாக போத்தனூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, ஜாகிர் உசேனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்