கோவை அரசு, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
கோவை அரசு, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை
கோவை அரசு, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
சுகாதாரத்துறை அமைச்சர்
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தொற்று பரவலை தவிர்ப்பதற்காகவும், தடுப்பு பணியை துரிதப்படுத்தவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் கோவை மாவட்டத்துக்கு கொரோனா தடுப்பு பணிக்காக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் அவ்வப்போது தொழில் துறையினர், மருத்துவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு கோவை வந்தார்.
அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வு
பின்னர் அவர் நேற்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளதா என்று டீன் நிர்மலாவிடம் கேட்டு அறிந்தார். அப்போது அவருடன் அமைச்சர்கள் அர.சக்கரபாணி, கா.ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு காற்றில் இருந்து ஆக்சிஜனை பிரித்து எடுக்கும் கருவியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி, கா.ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். அத்துடன் அந்த கருவியின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, ஆக்சிஜன் வசதி உள்ளிட்டவை குறித்து டீன் ரவீந்திரனிடம் சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டு அறிந்தார்.
பொதுமக்களுக்கு அறிவுரை
இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்துக்கு சென்றனர். அங்கு ஆய்வு பணியை முடித்துக்கொண்டு நேராக மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட மெக்கரிக்கர் சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அமைச்சர்கள் நேரில் சென்றனர்.
அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கப்படுகிறதா? என்று அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தனர். அத்துடன் அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் பணிகளையும் ஆய்வு செய்தனர்.
இதுதவிர அங்கு உள்ள பொதுமக்களிடம் முகக்கவசம் அணிய வேண்டும், வெளியே சென்றால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.