காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட முக்கியஸ்தர்கள்

திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் தகராறு ஏற்பட்டது. இதனால் ஒரு பிரிவை சேர்ந்த முக்கியஸ்தர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-05-15 17:32 GMT
அரசூர், 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் காலனியில் கடந்த 12-ந் தேதி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி இரவு 10 மணிக்கு ஆடல்-பாடல் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இது பற்றி ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில் திருவிழா நடத்தக்கூடாது என்றும், ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதித்திருப்பதாகவும் கூறினர். பின்னர் ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். 

வாக்குவாதம் 

இதனை தொடர்ந்து விழாக்குழுவினர் போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் பேசி, ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்களை திரும்ப வாங்கிக்கொண்டனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்தியதாக ரமேஷ்தான் போலீசுக்கு தகவல் கூறியதாக தெரிவித்தார். 
இதனால் ஆத்திரமடைந்த காலனி பகுதியை சேர்ந்தவர்கள், ரமேஷ் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். மேலும் திருவிழா நடத்துவதற்கு ரூ.2 லட்சம் செலவாகி உள்ளதாகவும், அதனை வழங்குமாறும் கூறி வாக்குவாதம் செய்தனர். இது பற்றி அறிந்ததும் ரமேசுக்கு ஆதரவாக கிராம மக்கள் திரண்டனர். இதனால் காலனி மக்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. 

காலில் விழுந்து மன்னிப்பு 

இதற்கிடையில் காலனியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர், நேற்று காலை 8 மணி அளவில் கிராமத்துக்கு வந்து சிறியவர்கள் செய்த பிரச்சினைக்கு ஊரில் பிரச்சினை வேண்டாம் என்று கூறி பொதுமக்கள் மத்தியில் கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். 
இதற்கு காலனியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. 

போலீஸ் நிலையம் முற்றுகை 

இதை பார்த்த போலீசார், ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த 3 பேரை பிடித்து சென்றனர். இது பற்றி அறிந்ததும் கிராம மக்கள் ஒன்று திரண்டு, திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சின்ராஜ் ஆகியோர் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

62 பேர் மீது வழக்கு 

இந்த சம்பம் தொடர்பாக ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் காலனியை சேர்ந்த வெங்கடேசன் மகன் முருகன், பாண்டுரங்கன் மகன் லோகநாதன், ராமசாமி மகன் குமரன் மற்றும் ஆதிகேசவன் உள்பட 54 பேர் மீதும், காலனியை சேர்ந்த குமரன் கொடுத்த புகாரின் பேரில் ராமலிங்கம் மகன் ரமேஷ், கருணாநிதி மகன் கோகுல்ராஜ், ராமசாமி மகன் முத்துக்குமரன், ராமலிங்க மகன் சீதாராமன், கலியமூர்த்தி மகன் ராமச்சந்திரன், முருகன் மகன் முத்துராமன், இளையபெருமாள் மகன் சூர்யா, அய்யப்பன் உள்பட 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கோகுல்ராஜ், சீதாராமன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்