எட்டயபுரத்தில் நாளை முதல் பஸ்நிலையத்துக்கு காய்கறி சந்தை இடமாற்றம்- அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
எட்டயபுரத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் பஸ்நிலையத்துக்கு காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்படுவதாக அதிகாரிகள் மற்றும் வணிகர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
எட்டயபுரம், மே:
எட்டயபுரத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் பஸ்நிலையத்துக்கு காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்படுவதாக அதிகாரிகள் மற்றும் வணிகர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு நேற்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதன்படி காய்கறிகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதி அளித்து இருந்தது. டீ கடைகள், நடை பாதை கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டு இருந்தது.
மேலும் இன்று முழு ஊரடங்கையும் அரசு அறிவித்துள்ளது. நேரம் குறைப்பு, நாளை முழு ஊரடங்கு என்பதால் எட்டயபுரத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் எட்டயபுரம் நகர் மெயின்பஜார் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
ஆலோசனை கூட்டம்
இதையடுத்து எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தினை சரி செய்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதை தொடர்ந்து எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஐயப்பன் தலைமையில் வணிகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எட்டயபுரம் வர்த்தக சங்க தலைவர் ராஜா, எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மக்கள் கூட்டத்தினை தவிர்க்கும் வகையில் காய்கறிகளை மட்டும் எட்டயபுரம் பஸ் நிலையத்தில் விற்பனை செய்ய வேண்டும், தனி மனித இடைவெளியுடன் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும், இந்த நடைமுறை நாளை (திங்கள்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் தலைமையிடத்து மண்டல துணை தாசில்தார் ராமகிருஷ்ணன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன், மேற்பார்வையாளர் சரவணன், வர்த்தக சங்க துணை தலைவர் வெங்கடேஷ்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.