கோவில்பட்டி அருகே ரேஷன்கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம்- கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரத்தை கனிமொழி எம்.பி. வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி, மே:
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரத்தை கனிமொழி எம்.பி., வழங்கி தொடங்கி வைத்தார்.
கொரோனா நிவாரண நிதி
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் அறிவித்தார். இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று கோவில்பட்டியை அடுத்துள்ள இனாம் மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு 200 குடும்ப அட்டைதார்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கர நாராயணன், தாசில்தார் அமுதா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேந்திரன், துணை பதிவாளர் ஜெயசீலன், கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ்குமார், துணை தலைவர் இல்லற ஜோதி, நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஸ்ரீ மருத்துவமனை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் காசோலையை டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ் கனிமொழி எம்.பி.யிடம் வழங்கினார்.
கனிமொழி எம்.பி.
இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு இன்னும் அக்கறை மற்றும் கவனத்தோடு கொரோனா 2-வது அலை பிரச்சினையை கையாண்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இந்த அளவுக்கு இழப்புகளை சந்தித்திருக்க வேண்டாம். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளையும் முடுக்கி விட்டு, கொரோனா பாதிப்புகளை எந்தளவுக்கு குறைக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்ததெந்த வகையில் உதவிகளை செய்ய முடியும் என்பதையெல்லாம் செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து இந்த பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு கடுமையாக முயற்சித்து வருகிறது.
ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே முதல்வர், இந்த பிரச்சினையை எப்படி கையாளுவது என்று தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி இன்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். ஒரு நாளில் நாம் நோய் தொற்று பரவலை நிறுத்தி விட முடியாது. அதனால் தான் இப்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தனை நாள் இலகுவாக இருந்த ஊரடங்கு விதிமுறைகள், தற்போது கடுமைப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி காட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவும் 40 வயதுக்கு மேற் பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
36 குழுக்கள் அமைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,745 கிராமங்களுக்கு நேரடியாக மருத்துவ, சுகாதாரத் துறையினர் அடங்கிய குழுக்கள் சென்று, முகாம் அமைத்து, அங்குள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 36 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் முன் வர வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க கூடுதலாக 400 படுக்கைகள் அதிகரித்து, அதில் ஆக்சிஜன் பொருத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பா.ஜ.க.வின் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய நேரம் இது இல்லை. மக்களை காப்பாற்ற வேண்டிய நேரம். இந்த விமர் சனங்களை பா.ஜ.க.வினர், அவர்களது தலைவர்களை நோக்கி செய்திருந்தால் இன்று நாடு காப்பாற்றப்பட்டிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உணவு வழங்கும் திட்டம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் காலை 680 உணவு பொட்டலங்களும், மதியம் 1000 உணவு பொட்டலங்களும், இரவு 300 உணவு பொட்டலங்களும் வழங்குவதற்கு ஏற்படு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று காலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்கள் உறவினர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து முன்கள பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன், ஆர்.எம்.ஓ. சைலஸ்ஜெயமணி, டாக்டர்கள் பாவலன், குமரன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு
விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
கொரோனோ நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்பாடு, ஆம்புலன்ஸ் வசதிகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பற்றாக்குறை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோா் உறுதி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எட்டயபுரம் சாலையில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரத்தை பொதுமக்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், விளாத்திகுளம் தாசில்தார் ரகுபதி, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல் உட்பட தி.மு.க. நகர, ஒன்றிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.