அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம்

விழுப்புரத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண முதல் தவணை நிதி ரூ.2 ஆயிரம் வினியோகம் செய்யும் பணியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

Update: 2021-05-15 17:03 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண முதல் தவணை நிதி ரூ.2 ஆயிரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள ரேஷன் கடையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:- 
விழுப்புரம் மாவட்டத்தில் 5 லட்சத்து 88 ஆயிரத்து 169 பேருக்கு ரூ.117 கோடியே 63 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் கொரோனா நிவாரண நிதி முதல் தவணை தொகை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

மளிகை தொகுப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததுபோன்று 2-வது தவணை தொகையான மீதமுள்ள ரூ.2 ஆயிரமும் விரைவில் வழங்கப்படும். அரசு துறை அதிகாரிகளுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் தி.மு.க.வினர் உறுதுணையாக இருந்து இப்பணியை செய்ய வேண்டும். 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்றால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுங்கள். நமது வீட்டில் உள்ளவர்களை நாம் கட்டுப்பாடோடு வைத்திருக்க வேண்டும். தொற்று பரவாமல் பார்த்துக்கொள்வது அனைவரின் கடமை. தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதியன்று 13 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமணன், புகழேந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் பிரபாகரன், விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ், தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

22-ந் தேதி வரை வழங்கப்படும் 

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரேஷன் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபடாமல் நிவாரண உதவித்தொகை கிடைக்கும் வகையில் வருகிற 22-ந் தேதி வரை வழங்கப்படும். ஆகவே பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வராமல் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில், குறிப்பிட்ட நேரத்தில் வந்து பொருட்களை வாங்கிச்செல்லலாம். அனைவருக்கும் நிவாரண உதவித்தொகை விடுதலின்றி வழங்கப்படும், ஆகவே பொதுமக்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை என்றனர்.

மேலும் செய்திகள்