உடுமலை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொரோனா நிவாரண தொகையை வாங்கி சென்றனர்.
உடுமலை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொரோனா நிவாரண தொகையை வாங்கி சென்றனர்.
உடுமலை
உடுமலை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொரோனா நிவாரண தொகையை வாங்கி சென்றனர்.
நிவாரணத்தொகை
கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள சிரமங்களைக்குறைத்து, மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் கொரோனா நிவாரணத்தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம், 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இந்த நிவாரணத்தொகையைவாங்குவதற்கு ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் வரும் போது, ரேஷன் கடைகளில் கூட்டத்தை குறைக்கும் வகையில், வீடுதேடி சென்று டோக்கன் வழங்கப்பட்டது.
நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு இந்த நிவாரணத்தொகை வழங்க திட்டமிடப்பட்டு, அதன் அடிப்படையில், அந்த குடும்ப அட்டைதாரர் ரேஷன் கடைக்கு எந்த தேதியில், எத்தனை மணிக்கு வரவேண்டும் என்றும் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டிருந்தது.
183 ரேஷன் கடைகள்
உடுமலை தாலுகாவில் மொத்தம் 127 முழு நேர ரேஷன்கடைகளும், 56 பகுதி நேர ரேஷன் கடைகளும் என மொத்தம் 183 ரேஷன் கடைகள் உள்ளன. அரிசி வாங்கும் ரேஷன் அட்டைகள் மொத்தம் 1 லட்சத்து ஆயிரத்து 579 உள்ளன.
அரசு உத்தரவுப்படி உடுமலையில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத்தொகை வழங்கும் பணி நேற்று தொடங்கியது பல ரேஷன் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சென்று நிவாரணத்தொகையை வாங்கி சென்றனர்.ரேஷன்கடைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள, கடத்தூர், கணியூர், ஜோத்தம்பட்டி, காரத்தொழுவு, துங்காவி, மெட்ராத்தி, மைவாடி, தாந்தோணி, வேடப்பட்டி, சோழமாதேவி, மடத்துக்குளம், ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளின் மூலமாக, இப்பகுதியிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா முதற்கட்ட நிவாரண தொகையாக, ரூ. 2000 வழங்குவதற்கான டோக்கன் கடந்த சில நாட்களாக வழங்கப்பட்டு வந்தன.
அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய டோக்கனுக்கான தொகையை, நேற்று சனிக்கிழமை முதல் மடத்துக்குளம் பகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு, சம்பந்தப்பட்ட ரேஷன்கடைகளில், முதற்கட்ட நிவாரணத் தொகையாக ரூ.2000 வழங்கப்பட்டது. தினந்தோறும் சுமார் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும் எனவருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.