மலைக்கிராமத்தில் 24 பேருக்கு கொரோனா
வாணியம்பாடி அருகே மலைக் கிராம மக்கள் 24 பேருக்கு கொேரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சளி மாதிரியை சேகரிக்க சென்ற மருத்துவக்குழுவினரை கிராம மக்கள் அவதூறாக பேசி விரட்டியடித்தனர். அத்துடன் பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் வீடுகளை பூட்டி விட்டு காட்டுப்பகுதியிலும், விவசாய நிலங்களிலும் ஓடி பதுங்கி கொண்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே மலைக் கிராம மக்கள் 24 பேருக்கு கொேரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சளி மாதிரியை சேகரிக்க சென்ற மருத்துவக்குழுவினரை கிராம மக்கள் அவதூறாக பேசி விரட்டியடித்தனர். அத்துடன் பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் வீடுகளை பூட்டி விட்டு காட்டுப்பகுதியிலும், விவசாய நிலங்களிலும் ஓடி பதுங்கி கொண்டனர்.
இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் மாதகடப்பா மலைக்கிராமம் உள்ளது. அங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் தீ விபத்தில் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கில் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த ஒருசிலருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஆலங்காயம் வட்டார மருத்துவக் குழு மலைக் கிராமத்துக்குச் சென்று 74 பேருக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரித்தது. அதில் 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவ குழுவினர் விரட்டியடிப்பு
அதைத்தொடர்ந்து மலைக் கிராமத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, கிராமத்தில் இருந்து யாரும் வெளியேற வேண்டாம் என்றும், கிராமத்துக்குள் யாரும் வரவேண்டாம் என்றும் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் எச்சரிக்கை பேனர் சாலையின் குறுக்கே கட்டி அடைக்கப்பட்டது.
மலைக் கிராமத்தில் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா பாதித்த 24 பேரில் 23 பேரை சுகாதாரத்துறையினர் வாணியம்பாடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதில் ஒருவர் மட்டும் மருத்துவமனைக்கு வராமல் கிராமத்திலேயே இருந்தார். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ய சென்ற ஆலங்காயம் வட்டார மருத்துவக் குழுவினரை கிராம மக்கள் அவதூறாக பேசி கிராமத்துக்குள் நுழையக்கூடாது என எச்சரித்து துரத்தி வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அத்துடன் பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் வீடுகளை பூட்டி விட்டு காட்டுப்பகுதியிலும், விவசாய நிலங்களிலும் ஓடி பதுங்கி கொண்டனர்.
இதுகுறித்து மருத்துவக் குழுவினரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
போலீசார் மூலம்
மாதகடப்பா கிராமத்தில் 74 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 24 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர்களிடம் தொடர்பில் உள்ளவர்களை பரிசோதனை செய்ய சென்றோம். அப்போது அவர்கள் தங்களை அவதூறாகப் பேசி விரட்டியடித்தனர்.
அதுமட்டுமின்றி எங்களையும், தூய்மைப் பணியாளர்களையும் அந்தக் கிராமத்தில் உள்ள வீடு வீடாக சென்று கிருமி நாசினி தெளிக்க கூட அனுமதிக்காமல் மிரட்டுகின்றனர். அவர்களை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்து விட்டு நாங்கள் பணம் பெற்றுக் கொள்வதாக அவர்கள் எங்களை கேவலமாகப் பேசுகின்றனர்.
இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். இன்னும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வரவில்லை. அவர்கள் வந்த பின்பு அனைவருக்கும் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரியைச் சேகரிப்போம்.
இவ்வாறு மருத்துவக் குழுவினர் கூறி தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.