திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப் பட்டன. மளிகை, காய்கறி கடைகள் காலை 10 மணி வரை செயல்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப் பட்டன. மளிகை, காய்கறி கடைகள் காலை 10 மணி வரை செயல்பட்டன.

Update: 2021-05-15 16:12 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப் பட்டன. மளிகை, காய்கறி கடைகள் காலை 10 மணி வரை செயல்பட்டன. ரோட்டில் சுற்றித்திரிந்தவர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்
கொரோனா பரவல் திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. முழு ஊரடங்கு வருகிற 24-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பெருகிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு நேற்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.
அதன்படி காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஏற்கனவே மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவை நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்பட்டன.
 கடைகளில் கூட்டம்
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் மளிகை, காய்கறி கடைகள் திறக்காது. இதனால் காய்கறி, மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், மீன் இறைச்சி கடைகளில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 10 மணிக்கு முன்பு பொருட்களை வாங்க வேண்டும் என்று பொது மக்கள் முண்டியடித்து கடைகளுக்கு வந்தனர்.
மளிகை கடைகளில் அவசர, அவசரமாக மக்களுக்கு பொருட்களை வினியோகம் செய்தனர். பெரும்பாலான காய்கறி கடைகளில் 9 மணிக்கு காய்கறிகள் விற்று தீர்ந்தன. குறிப்பாக தக்காளி கிடைக்காமல் மக்கள் அங்குமிங்கும் அல்லாடினார்கள். 10 மணி ஆனதும் காய்கறி, மளிகை கடைகள், மீன், இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
டீக்கடைகள் அடைப்பு
மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஏ.டி.எம். மையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன. காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.
டீக்கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் டீக்கடைகள் செயல்பட அனுமதி இல்லை. திருப்பூர் மாவட்டத்தில் டீக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஆகவே சைக்கிளில் கேன் வைத்து டீ விற்பனை செய்தார்கள். மின்வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டது.
போலீசார் தீவிர சோதனை
காலை 10 மணிக்குள் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் கடைகளுக்கு சென்று வருவது குறைந்தது. அதன்பிறகு மாநகரில் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மாநகரின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பழைய பஸ் நிலையம் முன்புறம் உள்ள மேம்பாலத்தில் வாகனம் செல்லாதவாறு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. மேம்பாலத்துக்கு கீழ் ரோட்டில் தடுப்புகள் வைத்து அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தையும் சோதனை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்து அவர்களின் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகனங்கள் பறிமுதல்
இதுபோல் புஷ்பா ரவுண்டானா, குமார் நகர் சந்திப்பு, மாநகராட்சி சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டு ஏராளமான இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் உடனடி அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்