கூடுதலாக 150 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யும் பணி தீவிரம்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 150 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 150 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கொரோனா பரவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், கோவிட் கேர் சென்டர்களிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக சின்ன, சின்ன மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அதிகமாக காணப்படுகின்றனர்.
மேலும் ஸ்கேன் சென்டர்களிலும் மக்கள் வரிசையில் நிற்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து அனைத்துப் படுக்கைகளும் நிரம்பி உள்ளது. அதனால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆக்சிஜன் படுக்கை
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு முதல் கட்டமாக 500 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நோயாளிகள் அதிகரித்ததால் கூடுதலாக 100 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு 600 படுக்கை வசதிகளில் 525 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நோய் தொற்று பரவல் அதிகரித்ததால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் அங்கு கூடுதலாக மேலும் 150 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்பாடு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நோய் தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க 30 படுக்கை வசதிகளுடன் கூடிய தனி சிகிச்சை மையம் காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.