2-வது தவணை தடுப்பூசி போடுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு; சுகாதாரத்துறை செயலாளர் அருண் தகவல்

2-வது தவணை தடுப்பூசி போடுவதற்கான கால அவசகாசத்தை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் அருண் தெரிவித்தார்.;

Update: 2021-05-15 10:48 GMT

கொரோனா தடுப்பூசி

புதுவையில் தொற்று பரவலை தடுக்க கோவிஷீல்டு என்ற தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் முன்களப்பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், தீவிர நோய் பாதித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட 45-வது நாள் கழித்து 2-வது தடுப்பூசியை போட அறிவுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் செய்து 2-வது தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

12 வாரங்கள்...

மத்திய அரசு சுகாதாரத் துறை பரிந்துரைபடி கொரோனா தடுப்பு மருந்து வீரியத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, கோவிஷீல்டு தடுப்பூசி முதல் மற்றும் 2-ம் தவணைக்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இதனால் முதல் தடுப்பூசி செலுத்தியவர்கள் அந்த தேதியில் இருந்து 12 வாரங்கள் கழித்தபின், 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர் மருந்து

மேலும் சுகாதார துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்து மத்திய அரசால் வழங்கப்பட்ட 1000 குப்பிகள் புதுச்சேரிக்கு நேற்று வந்து சேர்ந்தது.

அரசு, தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் தொற்று நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு இல்லாமல், தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்