தன்னார்வலர்கள் நியமனம்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளதா? என்று வீடு, வீடாக ஆய்வு நடத்த தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்
ஊட்டி
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளதா? என்று வீடு, வீடாக ஆய்வு நடத்த தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
நீலகிரி மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊட்டி வட்டாரத்தில் 442 பேர், குன்னூர் வட்டாரத்தில் 202 பேர், கோத்தகிரி வட்டாரத்தில் 131 பேர், கூடலூர் வட்டாரத்தில் 349 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பழங்குடியின மக்களிடையே தொற்று பரவி வருவதால், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சுமார் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அறிகுறிகள்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா? என்று ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.
இதற்கு 300 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கணக்கெடுப்பு
தன்னார்வலர் ஒருவருக்கு தலா 25 வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பு முடித்தபின் தங்களது அறிக்கையை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் சமர்ப்பிப்பார்கள்.
தொடர்ந்து 6 நாட்கள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இந்த பணியின் போது வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஈடுபட வேண்டும் என்று பயிற்சி அளித்து, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.