புதர் நிறைந்த ஆற்று வாய்க்கால் தூர்வாரப்படுமா?

குற்றிமுற்றி பகுதியில் புதர் நிறைந்த ஆற்று வாய்க்கால் தூர்வாரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2021-05-15 09:35 GMT
கூடலூர்

குற்றிமுற்றி பகுதியில் புதர் நிறைந்த ஆற்று வாய்க்கால் தூர்வாரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆற்று வாய்க்கால்

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் பாண்டியாறு, மாயாறு உள்பட ஏராளமான ஆறுகள் உருவாகி உள்ளது. மேலும் ஆற்று வாய்க்கால்களும் அதிகளவில் காணப்படுகிறது. 

ஆண்டுதோறும் சுமார் 6 மாதங்கள் மழை பெய்கிறது என்பதால், அந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். மீதமுள்ள காலங்களில் குளிர் மற்றும் கோடை காலம் என்பதால், நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. 

குறிப்பாக ஆற்று வாய்க்கால்களில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் பல்வேறு இடங்களில் புதர் நிறைந்து காணப்படுகிறது. அதன்பின்னர் மழைக்காலம் தொடங்கியதும் வாய்க்கால்களில் உள்ள குப்பைகளால் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் ஊருக்குள் புகுந்து விடுகிறது.

புதர் நிறைந்து...

இந்த நிலையில் நெலாக்கோட்டையில் இருந்து குற்றிமுற்றி வழியாக தொரப்பள்ளிக்கு ஆற்று வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீர் மாயாற்றில் கலக்கிறது. ஆனால் தற்போது அந்த வாய்க்காலில் குப்பைகள் குவிந்து, புதர் நிறைந்து காணப்படுகிறது. 

மேலும் பல்வேறு இடங்களில் வாய்க்காலின் அகலம் குறைந்துவிட்டது. இதனால் மழைக்காலத்தில் அடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதேபோன்று விவசாய பயிர்களும் நாசமாகி விடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

தூர்வார வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கூடலூர் பகுதியில் கோடை காலம் முடிவடைந்து, இன்னும் சில வாரங்களில் மழைக்காலம் தொடங்க உள்ளது. இதனால் குற்றிமுற்றி ஆற்றுவாய்க்காலை அகலப்படுத்தி தூர்வார வேண்டும். அந்த வாய்க்கால் அகலம் குறைந்து கொண்டே வருகிறது.

இது தவிர கழிவு பொருட்கள் அதிகளவு தேங்கி காணப்படுகிறது. மேலும் முட்புதர்கள் நிறைந்து உள்ளதால் மழைக்காலத்தில் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் ஊருக்குள் புகுந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்